ஆயுளை நீளச் செய்யும் சைக்கிள் பயணம் -74 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் ஆறு மாதம் அதிகமாக வாழலாம். saikkil oduvathan palan

வாரத்துக்கு 74 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் ஆறு மாதம் அதிகமாக வாழலாம் என நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்ட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
நாம் உபயோகிக்கும், வாகனங்களால் உண்டாகும் எரிவாயுப் புகையால் காற்று மாசுபட்டுப் போகின்றது. இதனால், காற்று மண்டலத்திலும், பருவக்காலங்களிலும் மாற்றம் ஏற்படுவதாக பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் ஏற்கனவே தெரியவந்துள்ளது. ஆகவே, பல நாடுகள் தமது குடிமக்களை சைக்கிள் ஓட்டும்படி வலியுறுத்தி வருகின்றன.
சைக்கிள் ஓட்டுவதற்கு தற்போது மற்றொரு நல்ல காரணமும் கிடைத்துள்ளது. சைக்கிள் ஓட்டுவது சுற்றுச் சூழலுக்கு நன்மை பயப்பதோடு மட்டுமின்றி நமது ஆயுளையும் அதிகரிக்கும் என நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்ட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்படி, ஒரு மணிநேர சைக்கிள் ஓட்டுவது, நமது வாழ்நாளில் மேலும் ஒரு மணிநேரத்தை அதிகரிக்கிறதாம். ஒரு வாரத்துக்கு 74 நிமிடம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு, அதை ஓட்டாதிருப்பவர்களைக் காட்டிலும் சுமார் ஆறு மாத காலம் வரை ஆயுள் நீட்டிப்பு கிடைப்பதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
உலகிலேயே சைக்கிள் ஓட்டுவதை விரும்புவோர் அதிகமுள்ளதாக நம்பப்படும் நெதர்லாந்தில், சுமார் ஆறாயிரத்து ஐந்நூறு பேர் வரை மரணத்திலிருந்து தப்பிக்க இத்தகைய சைக்கிள் ஓட்டுவதே காரணமாக அமைந்ததாக உலக சுகாதார மையத்தின் அட்டவணையை ஆய்வுசெய்த இந்த ஆராய்சிக்குழு தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தில், முப்பத்தேழாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு சைக்கிளில் பயணிப்போருக்கான தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.