மூல நோயினால் (piles) பாதிக்கப்பட்டவர்களா நீங்கள்? இந்த தகவல்கள் உங்களிற்கு பயனளிக்கும் mula pirachanaiya sari seyya

பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் (piles) ஒன்று. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும் இன்னல்கள் சொல்ல முடியாதவை. மனிதனின் கீழ்குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடல் பாதைகளில் உஷ்ணத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு வீக்கமாக காணப்படும். மலவாய் பகுதியில் நல்ல ரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான ரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன. அசுத்த ரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோய் என அழைக்கப்படுகிறது. இதனால் அதிக வலி, ரத்தக்கசிவு, மலம் இறுகுதல், உட்காரும்போது வலி போன்றவை ஏற்படும். மூலநோய் உள் மூலம், வெளி மூலம் என இரு வகைப்படும்.
உள் மூலத்தில் மேல் பகுதி ரத்தக் குழாய்களும், வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி ரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.
அறிகுறிகள்
மலம் கழிக்கச்செல்லும்போது மலத்தை இறுகச்செய்து, மலம் போக முடியாத அளவிற்கு வலி ஏற்படும். மேலும் ரத்தத்தோடு மலம் வெளிவரும். மேலும் ஆசனவாய் வளையங்களில் கிழங்குகளின் முனைகளைப் போலும், வேர்களைப் போலும், மாமிச முளைகளை உண்டாக்கி ஆசன வாயிலில் வலி, நமைச்சல் போன்றவை உண்டாகும்.
காரணங்கள்:
* கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள் உண்ணும்போது அவை மலக்குடலின் கீழ் பாகத்தில் வாதத்தை அதிகம் உண்டாக்கி மலத்தை இறுகச்செய்து இந்த நோயினை உண்டாக்கும்.
* அதிக காரம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும், மாமிச உணவுகளை உண்ணுவதாலும் மூல நோய் வரலாம்.
* எப்போதும் உட்கார்ந்திருப்பதும், குதிரை, யானை, ஒட்டக சவாரி செய்வதாலும், உண்ட உணவு செரிக்காமல் இருப்பதாலும் வயிற்றில் மந்தத்தை உண்டு பண்ணக்கூடிய உணவுகளை சாப்பிடுவதாலும் வரலாம்.
* பசி நேரங்களில் சாப்பிடாமல் பசியை அடக்குவதாலும், பட்டினி கிடப்பதாலும் மூலாதாரத்தில் வெப்பம் அதிகரித்து மலத்தை வெளியில் போகாதபடி அடக்கி மலவாயில் அதிக வெப்பம் உண்டாகும். இதனாலும் நோய் உண்டாகும்.
* நாள்பட்ட மலச்சிக்கல், மலம் கழிக்க கஷ்டப்படுதல், நீண்ட நாள் வயிற்றுப்போக்கு, ஆசன வாயில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் போன்றவற்றாலும் மூல நோய் உண்டாகும்.
வகைகள்:
1. நீர் மூலம்: வயிறு வலித்தல், கீழ் வயிறு இரைச்சல், மலவாயில் நுரையுடன் கூடிய நீர் வழிதல்.
2 செண்டு மூலம்: கருணை கிழங்கு முளைவிடும் போது இருக்கும் வடிவம் போல் மலவாயின் பகுதியில் உண்டாகி சிவந்து, பருத்து வெளியாகும்.
3. பெருமூலம்: மலவாயில் எரிச்சல் உண்டாகி தடித்து அடி வயிறு கல் போலாகும்.
4. சிறுமூலம்: இதில் உடலெரியும். மயக்கமுண்டாகும், வயிறு பெருத்து பளபளப்பாகும். வயிற்றில் குத்தல், இரைதல், வயிறு இழுத்து பிடித்தது போல் வலித்தல் போன்றவை உண்டாகும்.
5. வறள் மூலம்: உடலில் வெப்பம் மிகுந்து குடல் வறட்சியடைந்து மலம் உலர்ந்தும், இறுகியும் வெளியாகாமல் தடைப்படும்.
6. குருதிமூலம்: தொப்புளில் வலி உண்டாகும். மலம் கழிக்கும்போது ரத்தமானது குழாயில் இருந்து பீச்சுவதுபோல் பாயும். மயக்கம், மார்பு நோய், தலை வலி, கண்கள் மஞ்சள் நிறம் அடைந்து காணப்படும்.
7. சீழ்மூலம்: மலவாயை சுற்றிலும் கடுப்பும், எரிச்சலும் உண்டாகும். சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியாகும்.
8. ஆழிமூலம்: மலவாயில் வெள்ளிக்கிழங்கைப் போன்று பருத்து நீண்டு, அதிலிருந்து நீரும், சீழும், ரத்தமும் வடியும்.
9. தமரக மூலம்: உடல் மெலியும், மேல் மூச்சு வாங்கும் அசதியும் உண்டாகும்.
10. வளிமூலம்: நமைச்சல், குத்தல், குடல் வலி உண்டாகும்.
11. அழல் மூலம்: வயிற்றுவலி, மலவாய்க்கடுப்பு, கோபம், உடல் பலம் குறையும்.
12. ஐயமூலம்: மலவாயில் வெண்மையான முளை தோன்றும். அதில் எந்நேரமும் எச்சல், கடுப்பு உண்டாகும். சிறுநீர் சூடாய் வெளியேறும்.
13. முக்குற்றமூலம்: மலவாய் இறுகி நடக்க முடியாது. வயிறு முழுவதும் ஒருவித வலி, நீர் வேட்கை உண்டாகும்.
14. வினை மூலம்: புளியேப்பம், அடிவயிறு குத்தல், வயிறு இரைதல், கோபம், மலம் கட்டுதல் ஆகியவை உண்டாகும். மேலும் கை, கால் உளைச்சல், கடுப்பு ஏற்படும்.
5. மேகமூலம்: ஆண் குறியில் வெள்ளை விழும். வயிறு இரைந்து பேதியாகும். சிறுநீர் எரிச்சலுடன் வெளியாகும். தலைவலி உண்டாகும்.
16. குழி மூலம்: எருவாயின் முளைக்கு பக்கத்தில் சிறு கட்டியைப் போல் தோன்றி உடையும். உடைந்த இடம் எளிதில் உலராது.
17. கழல் மூலம்: ஆண் குறியில் புண் உண்டாகி மலவாய் வரையில் பரவி அதிலிருந்து வலி உண்டாகும். எரிச்சலும், கடுப்பும் உண்டாகும்.
18. அடித்தள்ளல் மூலம்: மலவாயிலில் மூங்கில் குருத்தது போல் தடித்து அடிக்குடல் வெளியாகி தோன்றும்.
19. வெளிமூலம்: மலவாயில் சிறு பருக்களைப்போன்ற முளை வெளிப் புறமாய் தோன்றும். எண்ணெயைப் போலும், தண்ணீர் போலும் கடுப்புடன் சீழ்கசியும். அரிப்பு, எரிச்சல், சொறி, சிரங்கு ஏற்படும். 20. சுருக்கு மூலம்: மலவாய் சுருங்கி தடிப்பு உண்டாகும். பெருங்குடல் வலியுடன் உப்பும், மலத்துடன் ரத்தமும், நீரும் வெளியாகும்.
21. சவ்வு மூலம்: மலவாயிலில் முளையானது நீண்டு ஜவ்வு போல் கீழே தொங்கும். சீழும் ரத்தத்தோடு நீரும் கசியும்.
எளிய சிகிச்சைகள்:
* பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி, பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர மூலம் கரைந்து விடும்.
*துத்தி இலையை இரண்டு கை அளவு நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள், சிறிய வெங்காயம் நறுக்கி போட்டு விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மிளகுத்தூள், உப்பு சிறிது சேர்த்து 10 நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.
* வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர சில நாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும்.
* நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனி செடியைத் தேவையான அளவு எடுத்து வந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்கு காய விடவும். காய்ந்த பின் இலை, வேர், தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும். இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணெய் ஒரு எலுமிச்சை அளவு சேர்த்துப் பிசைந்து காலை , மாலை என 40 நாள் சாப்பிட்டு வர அனைத்து மூல வியாதியும் குணமாகும் . இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது அதிக காரம், பச்சை மிளகாய், கோழிக்கறி சேர்க்கக் கூடாது. மிளகு சேர்த்துக் கொள்ளலாம். உடல் உறவு கூடாது.
* கீரை, காய்கறி, பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். விரைவில் தூங்கி அதிகாலை எழ வேண்டும். கணினி, சமையல் வேலை போன்ற உஷ்ணத்தைப் பெருக்கக்கூடிய பணிகளை போதுமான இடைவெளி விட்டு செய்ய வேண்டும்.
* காட்டுக்கருணை, காராக்கருணை, புளியம்பிரண்டை, நாப்பிரண்டை, மருள்கிழங்கு, கற்றாழை வேர், சமையல் கருணை, மாம்பருப்பு, தோல் நீக்கிய சுக்கு, கடுக்காய்த்தோல், கொடிவேலி வேர்ப்பட்டை, கோரைக்கிழங்கு, சரக்கொன்றை புளி ஆகியவற்றை சம அளவு எடுத்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் போட்டு உலர்த்தி இடித்து, சலித்து, லேசாக நெய்யில் பிசறி, இளவறுப்பாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இத்துடன் 2 பங்கு கருப்பட்டி தூளையும் கலந்து வைத்துக்கொள்ளலாம். இந்தச்சூரணத்தை காலை மற்றும் இரவு 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர மூலநோய் நீங்கும்.
* தினமும் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிட வேண்டும்.
* பிரண்டை, இஞ்சி போன்றவைகளால் செய்யப்பட்ட பொரியல், கருணைக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு: இவை பெரும்பாலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கலாம்.